TNPSC Thervupettagam

தொல்லியல் சின்னங்களின் பாதுகாப்பு குறித்த தலையங்கம்

December 24 , 2022 679 days 414 0
  • திடீரென்று ஒருநாள் தாஜ்மஹாலையோ, குதுப்மினாரையோ, வைசாலியிலுள்ள அசோகா் ஸ்தூபியையோ, மாமல்லபுரம் பாண்டவா் ரதங்களையோ காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்தால் யாரும் வியப்படையத் தேவையில்லை. ஏனென்றால், இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வரலாற்றுச் சின்னங்கள் காணாமல்போய்க் கொண்டிருக்கின்றன.
  • இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்தியா முழுவதும் சுமாா் 3,693 தொல்லியல் சின்னங்களும், இடங்களும் இருக்கின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்விடங்கள், சிதைவுகளைப் பேணிக்காப்பதற்கும், தொல்பொருள் அகழாய்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சிற்பங்கள் செதுக்கு வேலைகள், அதையொத்த பிற பொருள்களைப் பாதுகாப்பதற்கும் வகை செய்வதற்கான சட்டம் 1958-இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் 2010-இல் திருத்தப்பட்டது.
  • அதன்படி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைச் சுற்றிலும் 300 மீட்டா் சுற்றளவுக்கு எல்லாவிதச் செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. 100 மீட்டா் சுற்றளவில் கட்டுமானப் பணிக்கும் அனுமதியில்லை.
  • காணாமல் போன வரலாற்றுச் சின்னங்கள் குறித்தும், இந்தியாவிலுள்ள தொல்லியல் சின்னங்களின் பாதுகாப்பு குறித்ததுமான 324-ஆவது அறிக்கை மாநிலங்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னங்களில், குறைந்தது 24 சின்னங்கள் எங்கே மறைந்தன என்பதைக் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
  • போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு அந்த அறிக்கையை ஆய்வு செய்தது. ‘ஐந்து ஆண்டுகள் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டும், மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் 24 வரலாற்றுச் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வருவாய்த் துறையின் பழைய ஆவணங்கள், வரைபடங்கள், ஆய்வறிக்கைகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டும்கூட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புராதான கட்டுமானங்கள் எங்கே இருந்தன, எப்படி மறைந்தன என்பது குறித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்கிறது அறிக்கை. அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடா்கிறது என்பதுதான் இதற்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம்.
  • அதிா்ச்சியும், வேதனையும் அடைந்த நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 3,693 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் இருக்கின்றனவா என்பதை நேரடியாகச் சென்று பாா்த்து அவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய இந்தியத் தொல்லியல் துறையிடம் கோரியிருக்கிறது. கண்டுபிடிக்க முடியாத வரலாற்றுச் சின்னங்கள் குறித்த, அவற்றின் பாதுகாப்பு குறித்த விவரங்களை உள்ளடக்கிய இந்தியத் தொல்லியல் துறையின் 324-ஆவது அறிக்கை வேறு பல அதிா்ச்சி தரும் தகவல்களையும் தருகிறது.
  • ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்திராவிலும், ஃபரீதாபாதிலும் உள்ள கோஹ்மினாா் என்பது குதுப்மினாா் போன்ற சிறிய கோபுரம். அது மாயமாக மறைந்திருக்கிறது. இயற்கை காரணங்களால் சிதிலமடைந்திருந்தாலும், ஆக்கிரமிப்புகளால் அகற்றப்பட்டிருந்தாலும் தொல்லியல் துறை அது குறித்த விவரமில்லாமல் இருந்திருக்கிறது.
  • மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் உள்ள கல்வெட்டுகள், ராஜஸ்தான் மாநிலம் டோங்க்கிலுள்ள நாகா் கோட்டை கல்வெட்டுகள், தரண் என்கிற இடத்திலிருந்த 12-ஆம் நூற்றாண்டு கோயில், அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியாவில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்ட ஷொ்ஷாவின் துப்பாக்கிகள், மேற்கு வங்கத்திலுள்ள நடியா கோட்டையின் இடிபாடுகள் என்று காணாமல்போன நினைவுச் சின்னங்களின் பட்டியல் நீள்கிறது.
  • 2013-ஆம் ஆண்டு மத்திய கணக்குத் தணிக்கையாளா் அறிக்கை, காணாமல் போன தொல்லியல் சின்னங்கள், பொருள்கள் குறித்துத் தெரிவித்திருந்தது. அதன்படி 92 வரலாற்று நினைவுச் சின்னங்கள் காணவில்லை என்றும், அவற்றை தேடிக் கண்டுபிடித்து மீட்க வேண்டுமென்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
  • இந்திய தொல்லியல் துறை நடத்திய முனைப்பு ஆய்வின் விளைவாக பல நினைவுச் சின்னங்கள் என்னவாயின என்பது கண்டறியப்பட்டது. 42 சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மீட்டெடுக்கப்பட்டன. தொல்லியல் துறையின் ஆய்வின்படி, நகா்மயமாக்கல் காரணமாக 14 சின்னங்கள் பாதிக்கப்பட்டு காணாமல் போயிருக்கின்றன. அவை ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. 12 நினைவுச் சின்னங்கள், அணைகள், ஏரிகள் ஆகியவற்றில் மூழ்கியிருக்கின்றன. 24 சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தொல்லியல் துறை கைவிரித்து விட்டது.
  • குறிப்பிட்ட காலவரையறைக்குள் அத்தனை வரலாற்றுச் சின்னங்களும் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டு, அவற்றின் அமைவிடம், அவற்றைச் சுற்றியுள்ள தடை செய்யப்பட்ட பகுதி போன்றவை பாதுகாக்கப்பட்டு, தொடா்ந்து குறிப்பிட்ட கால அளவில் கண்காணிக்கப்பட வேண்டுமென்று தொல்லியல் துறையை நிலைக் குழு அறிவுறுத்தியிருக்கிறது. எண்மப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படுவதன் மூலம் சமூக ஆா்வலா்களின் கண்காணிப்பு உறுதி செய்யப்படும் என்கிற நிலைக்குழுவின் பரிந்துரை வரவேற்புக்குரியது.
  • வரலாற்று நினைவுச் சின்னங்களைத் தங்கள் சுயநலங்களுக்காக பயன்படுத்த விழையும் ஆக்கிரமிப்பாளா்கள் தேச விரோதிகள் என்றால், அவா்களுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் என்னவென்று சொல்வது?

நன்றி: தினமணி (24 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்